கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இங்குள்ள மரங்களில் பழுத்து தொங்கும் பலாப்பழங்களை தின்ன சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அவை அடிக்கடி கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டுயானை ஒன்று நின்று கொண்டு இருந்தது. உடனே அந்த வழியாக சாலையில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி காட்டுயானையை செல்போனில் படம் பிடித்தனர்.
இதை கண்டு மிரண்டு போன காட்டுயானை, தேயிலை தோட்டத்தில் இருந்து சாலைக்கு ஓடி வந்தது. உடனே அவர்கள் தங்களது வாகனங்களில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து ஓடி வந்த காட்டுயானை, வாகனங்களை துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் சிறிது தூரம் ஓடி வந்த காட்டுயானை, தேயிலை தோட்டத்துக்குள் மீண்டும் சென்றது. இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-
குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் முடிவடைய உள்ளது. அதன்பிறகு காட்டுயானைகள் சமவெளி பகுதிகளுக்கு சென்று விடும். எனவே சாலைகளில் அல்லது தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகளை கண்டால் தொல்லை கொடுக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்க கூடாது. இதனால் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். மேலும் வாகனங்களில் ஒலி எழுப்புவதை தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story