பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைக்கு சீல் - மாநகராட்சி நடவடிக்கை


பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைக்கு சீல் - மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை,

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையை மீறி, மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கண்காணிப்பு குழுவினர் தொடர் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முதல் முறையாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நகர்நல அலுவலர் தலைமையில் கடந்த 5 நாட்களாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு இதுவரை ரூ.94,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு பூக்கள் வாங்கிய 27 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2700 அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது குறித்து 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அந்த கடையில் இருந்து சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story