அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை


அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 Sept 2019 5:00 AM IST (Updated: 28 Sept 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை அளித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டாபிராம் தண்டுரை ஏகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 27). கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கவுரி (25) என்ற மனைவியும், 1½ வயதில் ஆகாஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அதனால் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், அவர் கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் ஆகாஷ் தனக்கு பிறக்கவில்லை என்று கூறி குழந்தையை கொலை செய்யப்போவதாக கூறி கவுரியை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். அப்போது, குடிபோதையில் தன் மனைவி கவுரியையும், மகன் ஆகாஷையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் நீண்ட நாட்களாக மனவேதனையில் இருந்து வந்த கவுரி, கடந்த 2016-ம் ஆண்டு வீட்டிற்கு மதுபோதையில் வந்த கணவர் ராஜ் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.

பின்னர், வீட்டை பூட்டி விட்டு தன் மகனுடன் தலைமறைவாகிவிட்டார். 2 நாட்கள் கழித்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த, அக்கம் பக்கத்தினர் பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கவுரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட அரசு வக்கீலாக ஜி.மோகன்ராம் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கவுரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பட்டாபிராம் போலீசார் கவுரியை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story