தடையில்லா சான்று வழங்க லஞ்சம்: போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டருக்கு சிறை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற போலீஸ் தடையில்லா சான்று வாங்க வேண்டி இருந்தது. இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ராஜமாணிக்கம் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வ மணியிடம் சான்றிதழ் கேட்டு அணுகினார்.
அப்போது செல்வமணி ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜமாணிக்கம் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சிலம்பரசன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, செல்வமணியை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜமாணிக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வமணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோரிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வமணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story