ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Sept 2019 4:00 AM IST (Updated: 28 Sept 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 39). தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (39). தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (43). இவர்கள் 3 பேர் மீதும் பல குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

கடந்த மாதம் தூத்துக்குடியில் பிரபல ரவுடி சிந்தா சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வடிவேல், ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முனியசாமி சிவகாசி கோர்ட்டில் சரண் அடைந்தார். இதில் வடிவேல், ஜான்சன் ஆகியோர் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், முனியசாமி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வடிவேல் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து வடிவேல், முனியசாமி, ஜான்சன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் வழங்கினார்.

Next Story