வேட்புமனுவை முன்மொழிய ஆட்கள் தேடிய வேட்பாளர்; காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வினோதம்


வேட்புமனுவை முன்மொழிய ஆட்கள் தேடிய வேட்பாளர்; காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வினோதம்
x
தினத்தந்தி 28 Sept 2019 4:30 AM IST (Updated: 28 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனுவை முன்மொழிய வேட்பாளர் ஆட்கள் தேடிய வினோத சம்பவம் புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை கணுவாப்பேட்டை லூர்து நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் அகஸ்டின் (வயது 70). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

முக்கிய அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த இவர் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார். இதற்காக தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவினை பெற்று அதில் கேட்கப்பட்டிருந்த விவரங்களை பூர்த்தி செய்து உப்பளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்றால் கட்சியின் அங்கீகார கடிதத்துடன் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். ஆனால் சுயேட்சை என்றால் சம்பந்தப்பட்ட தொகுதியில் வசிக்கும் 10 வாக்காளர்கள் வேட்புமனுவினை முன்மொழிய வேண்டும் என்பது விதிமுறையாகும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.

இதில் ஜார்ஜ் அகஸ்டினின் வேட்புமனுவினை யாரும் முன்மொழியவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் முன்பு வந்த அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் யாராவது காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் உள்ளர்களா? என்று கேட்டார். ஏன் கேட்கிறீர்கள்? என்று அங்கிருந்தவர்கள் கேட்டதும் நான் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் எனது வேட்புமனுவினை முன்மொழிய யாரும் ஆளில்லை. நீங்கள் யாராவது முன்மொழிந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார்.

அப்போது சிலர் நாங்கள் முன்மொழிந்தால் எங்களுக்கு என்ன செய்வீர்கள்? என்று கேட்டனர். இந்த தள்ளாத வயதில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை? என்று கிண்டலடித்தனர்.

அவர்களிடம் ஜார்ஜ் அகஸ்டின், நான் 40 ஆண்டுகளாக ஒரு அரசியல் கட்சியில் உள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. ஆனால் பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு வேட்புமனுவை முன்மொழிய ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

காமராஜ் நகர் தொகுதியை சேர்ந்தவர்கள் யாரும் அங்கு இல்லாததால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்யாமலேயே அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

Next Story