நாங்குநேரி தொகுதியில் வாகன சோதனை தீவிரம் - பணம், பரிசுப்பொருட்கள் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை


நாங்குநேரி தொகுதியில் வாகன சோதனை தீவிரம் - பணம், பரிசுப்பொருட்கள் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதியில் பணம், பரிசுப்பொருட்கள் வினியோகத்தை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நாங்குநேரி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக கலெக்டர் ஷில்பா அறிவித்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் வாகன சோதனை நடத்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த குழுக்கள் முக்கியமான சாலை சந்திப்பு பகுதிகளிலும், தகவல் கிடைக்கும் பகுதிகளுக்கு சென்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க, நெருங்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இதையொட்டி நேற்று நாங்குநேரி தொகுதிக்குள்ளும், தொகுதியை சுற்றி உள்ள முக்கிய சாலை சந்திப்புகளிலும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது.

நெல்லை மேலப்பாளையம் அருகே கருங்குளம் சோதனைச்சாவடியில் கலால் தாசில்தார் இந்திரா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று நெல்லை -சேரன்மாதேவி ரோட்டில் சென்ற வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர்.

நாங்குநேரி யூனியன் அலுவலகம் அருகே ரெயில்வே கேட்டையொட்டி பறக்கும் படை தாசில்தார் மோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் களக்காடு, ஏர்வாடி, வள்ளியூர் மெயின் ரோடு, மூலக்கரைப்பட்டி, கே.டி.சி. நகர், பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். ஆனால், இந்த சோதனையில் பணம், பரிசுப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story