மாணவிகள் செல்போனை கவனமுடன் கையாள வேண்டும் - மாவட்ட நீதிபதி பேச்சு
மாணவிகள் தங்களது செல்போனை கவனமுடன் கையாள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி கருணாநிதி தெரிவித்தார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்விழி அறிவுரையின்படி வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவிகளுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ- மாணவிகள் தங்களது செல்போனை கவனமுடன் கையாள வேண்டும். செல்போனில் உலகளாவிய அறிவுக்களஞ்சியங்கள் எவ்வளவு கொட்டிக்கிடக்கின்றதோ? அந்தளவிற்கு தீமைகளும் கொட்டிக்கிடக்கின்றது. அன்னப் பறவையானது பாத்திரத்தில் உள்ள பாலை மட்டும் எடுத்துக்கொண்டு தண்ணீரை எவ்வாறு விட்டு விடுகிறதோ? அம்மாதிரி கல்வி சம்பந்தப்பட்ட செய்திகளை மட்டும் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது புகைப்படங்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு பகிர்ந்து கொண்டால் சமூக வலைதளங்களில் சமூக விரோதிகளின் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்தும், அக்குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து சட்டம் சார்ந்த குறிப்பாக இன்சூரன்ஸ், மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள், கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகான மக்கள் நீதிமன்றத்தையும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவையும் அணுகினால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வழக்கறிஞர் முருகையன் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மீனா வரவேற்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story