காஷ்மீரில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு - எச்.ராஜா தகவல்
காஷ்மீரில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று எச்.ராஜா கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு பா.ஜ.க. பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் தேசிய ஒற்றுமை பிரசாரம், இந்திய அரசியலமைப்பு சட்டம் 370-35ஏ பிரிவை நீக்கம் குறித்து விளக்குவதற்காக மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணா சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கலை இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் சேகர் வரவேற்றார். மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் 2004 முதல் 2019 வரை ஒதுக்கிய நிதி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஆகும். இதனை காஷ்மீரை சேர்ந்த 2 அல்லது 3 குடும்பங்களே முற்றிலும் அனுபவித்து வந்துள்ளது. அங்கு மத்திய அரசு ஆடிட்டர் ஜெனரல் நுழைந்து கணக்கை சரிபார்க்கமுடியாத நிலை இருந்துவந்தது. 70 ஆண்டுகளாக செய்யமுடியாத சாதனையை பிரதமர் நரேந்திரமோடி 48 மணி நேரத்தில் செய்துவிட்டார். 100 முறை நரேந்திரமோடி பிரதமர் ஆனாலும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கமுடியாது என்று பரூக்அப்துல் கூறிவந்தார். ஆனால் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி சாதனை புரிந்துவிட்டார்.
இதனை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களான மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்கள் எதிர்க்கிறார்கள். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த, தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்துள்ள சோனியாகாந்திக்கு துணைப்போகிறவர்கள் 370-வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அங்கு யூனியன் பிரதேசமாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. இனி காஷ்மீரில் யாரும் நிலங்கள் வாங்கலாம், தொழில்கள் செய்யலாம். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் காஷ்மீரில் நடக்க உள்ளது. அந்த மாநிலம் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சுபிக்ஷா சாமிநாதன், பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சந்திரசேகர், திருமாவளவன் மற்றும் மண்டலத்தலைவர்கள், நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story