புதிய பாம்பினத்தை கண்டுபிடித்த உத்தவ் தாக்கரேயின் இளைய மகன்: அவர் பெயரே சூட்டப்பட்டது
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புதிய பாம்பினத்தை கண்டுபிடித்த உத்தவ் தாக்கரேயின் இளைய மகனின் பெயரே அந்த பாம்பினத்திற்கு சூட்டப்பட்டது.
மும்பை,
உத்தவ் தாக்கரேயின் இளைய மகன் தேஜஸ் தாக்கரே. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மராட்டியத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பினம் இருப்பதை கண்டுபிடித்தார். மேலும் இதுகுறித்த ஆய்வு அறிக்கையை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து புனேயை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆய்வு நடத்தி பூனை பாம்பு இனம் இருப்பதை உறுதி செய்து உள்ளனர். இந்த பாம்பு மரத்தவளை மற்றும் அதன் முட்டைகளை தின்னும் அரியவகை உயிரினம் ஆகும். இதன் மேல் பகுதியில் புலி போன்ற வரிகள் இருக்கும். இந்த பாம்பு இனத்துக்கு ‘‘தாக்கரேஸ் பூனை பாம்பு'' என பெயரிட்டு உள்ளனர். அதாவது தேஜஸ் தாக்கரே இந்த பாம்பினத்தை கண்டுபிடித்ததற்காக அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாம்பின் அறிவியல் பெயர் ‘போய்கா தாக்கரேயி' ஆகும்.
இதுகுறித்து தேஜஸ் தாக்கரேக்கு அவரது அண்ணனும், சிவசேனா இளைஞர் அணி தலைவரான ஆதித்ய தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புதிய பாம்பினத்தின் படத்தை பகிர்ந்து உள்ளார்.
Related Tags :
Next Story