கந்தர்வகோட்டை அருகே, சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


கந்தர்வகோட்டை அருகே, சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 28 Sept 2019 3:30 AM IST (Updated: 28 Sept 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமம் முதல் நொடியூர் வரை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 21 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது முறையாக போடப்படாத காரணத்தால், ஆங்காங்கே உடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்பவர்கள் அதிகளவு சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, இந்த சாலையை சீரமைக்கக்கோரி ஏற்கனவே கல்லுப்பட்டி, விராலிப்பட்டி பொது மக்கள் 2 முறை சாலை மறியல் செய்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கல்லுப்பட்டி, விராலிப்பட்டி, நொடியூர், நத்தமாடிப்பட்டி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கல்லுப்பட்டி பிரிவு சாலை அருகே ஒன்று கூடி சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி அரசமணி, துணை தாசில்தார் செல்வகணபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை மீண்டும் சரிசெய்து கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story