கோவையில் வனக்காப்பாளர் பயிற்சி நிறைவு விழா: வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது
வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வாணையம் குழுமம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 550 வனக்காப்பாளர்கள், 45 ஓட்டுனர்களுக்கு, கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்த வனக்காப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா, கோவை வனக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து மலை மற்றும் வனப்பகுதியில் செல்வதற்கு வசதியாக ஹிமாலயன் மோட்டார் சைக்கிள்களை பெண் வனக்காப்பாளர்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார். அதை அவர்கள் மைதானத்தில் ஓட்டிச்சென்றனர்.
மேலும் பயிற்சி முடித்த வனக்காப்பாளர்கள் மனித பிரமீடு போன்று நிற்பது, மோட்டார் சைக்கிள் சாகசம் உள்பட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர். அனைத்து பயிற்சியிலும் சிறப்பான முறையில் தேர்வு பெற்ற அனில் விக்னேஷ் மற்றும் ஒவ்வொரு பயிற்சியிலும் முதன்மை பெற்றவர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
நீர் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பன்மை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வனம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். வளிமண்டத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்கக்கூடியவைகளாக வனங்கள் செயல்படுகின்றன. பூமிக்கடியில் படர்ந்துள்ள மரம், செடி, கொடிகளின் வேர்கள் மண் வளத்தை பிணைத்து, மண் அரிப்பை தடுத்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மனித இனத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
வனமே வாழ்வு என்பதை உணர்ந்தவர்கள் நாம். காடுகளை நேசித்த மன்னர்களையும், மக்களையும் தமிழ்நாடு வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகிறது. 1855-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு கிளக்ஹார்ன் என்பவரை மெட்ராஸ் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் எனும் துறையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்தது. அவரையே சென்னை மாகாணத்தின் முதல் வனப்பாதுகாவலராக நியமித்தது.
அதன்படி உருவாக்கப்பட்டு, பின்னர் 1864-ம் ஆண்டு இந்திய வனத்துறையாக உருவெடுத்தது. அந்த வகையில் வனப்பாதுகாப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அதன் பிறகு 1865, 1878 மற்றும் 1882 ஆகிய ஆண்டுகளில் இந்திய மற்றும் மெட்ராஸ் வனச் சட்டங்கள் இயற்றப்பட்டு வனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
25.7.2018 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தனியே வனக் கொள்கை ஒன்றை வெளியிட்டது வரலாற்று சாதனையாகும். இந்த வனக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்களின் சங்கமம், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய அவசியம், வனப் பகுதிகளுக்கும் வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் போன்ற தனித்துவமான பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023’ மாநிலம் முழுவதும் சமநிலைப்பட்ட சுற்றுச்சூழலை வலியுறுத்துகிறது. 33 சதவீதம் வனம் மற்றும் அடர்த்தியான பரப்பை எய்திடும் வகையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய வன நில அளவை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு அறிக்கையின்படி மாநிலத்தின் வனப்பரப்பு 26 ஆயிரத்து 281 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த புவியியற் பரப்பில் 20.21 சதவீதம் ஆகும். இந்திய வன நில அளவை நிறுவனத்தால் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கை களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பு 75 சதுர கிலோ மீட்டர் அதிகரித்து உள்ளது. வனம் மற்றும் வனத்திற்கு வெளியே, வனம் மற்றும் மரப் பரப்பினை அதிகரிக்க செய்வதற்கான கொள்கையை பின்பற்றியதால் இச்சாதனை படைக்கப்பட்டது.
வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, 15 வன விலங்குகள் சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோள் பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டு வன உயிரின பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமை போர்வையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் விளைவுகளை குறைத்தல் ஆகிய நோக்கங்களை கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அவரால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2011-12-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2019-20-ம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று வனப் பெருக்கம் மற்றும் வனப்பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த, வனத் துறையில் கடமையுணர்வுடன் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மிகவும் அவசியம். இருக்கும் வனப்பரப்பை பாதுகாத்திடவும், வனத்திற்கு வெளியே வனப்பரப்பை விரிவுபடுத்தவும், வனத்துறைக்குப் போதுமான பணியாளர்களை நியமிப்பது அவசியமாகிறது.
இந்த நிலையில் வனத்துறையில், 45 சதவீதத்திற்கு மேல் இருக்கும் களப்பணியாளர்களின் காலிப் பணியிடங்களை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே முதன் முறையாக வனத் துறைக்கென தமிழ்நாடு வன சீரூடைப் பணியாளர் குழுமம் 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இக்குழுமம் மூலம் முதன்முறையாக இணைய வழித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுக் குழுமத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு 726 வனக்காப்பாளர்கள், 152 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் மற்றும் 300 வனவர்கள் தேர்வு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் என்னால் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன்முறையாக 190 பெண் வனக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போது 595 நபர்கள் பயிற்சியினை நிறைவு செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வனத்துறை பணியில் இணையவிருக்கும் உங்களுக்கு பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வனங்களைப் பாதுகாத்தல், காடுகளை வளர்த்தல் மற்றும் பராமரித்தல், வனத்துக்குள் வாழும் பழங்குடி மக்களின் காவலனாக இருத்தல், தாய்நாட்டின் இயற்கை வளங்களான விலங்குகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை பாதுகாத்தல் போன்ற எண்ணற்ற வனம் சார்ந்த பணிகளை தாங்கள் திறமையுடனும், முழு கடமை உணர்வுடனும் செய்ய வேண்டும்.
இந்த அரசு உங்களின் பணிகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சியை நல்ல முறையில் நிறைவு செய்த உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பணி மிக முக்கியமான பணி. எத்தனையோ துறைகள் இருந்தாலும் வனத் துறை என்பது இயற்கையை வளமாக்குகின்ற துறை. அந்தத் துறையில் நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, அரசு முதன்மை செயலாளர் கல்லோலிகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு, மாவட்ட கலெக்டர் ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story