அலோக்குமாரிடம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு தொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமாரிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு,
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அரசியல் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், தொழில்அதிபர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பாவின் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு(2018) ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்த ஆண்டு(2019) ஆகஸ்டு மாதம் வரை கர்நாடகத்தில் நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்களை பெற்றுள்ளனர். அப்போது, 300 தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில், கர்நாடக ஆயுதப்படை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வரும் அலோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதாவது பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராகவும், மத்திய குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் அலோக்குமார் இருந்த போது தான் தொலைபேசி ஒட்டுகேட்பு நடந்தது தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஓசூர் ரோட்டில் உள்ள அலோக்குமாரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது செல்போன்கள், மடிக்கணினிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக அலோக்குமாரிடம் 6 மணிநேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் நிருபதுங்கா ரோட்டில் உள்ள அலோக்குமாரின் அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அலோக்குமாருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு வழங்கி இருந்தனர். இதையடுத்து, பெங்களூரு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் நேற்று 2-வது நாளாக அலோக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக நேற்று காலை 11 மணியளவில் குமரகிருபா விருந்தினர் மாளிகைக்கு அலோக்குமார் வந்தார்.
பின்னர் அலோக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் விசாரணை மேற்கொண்டனர். தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அலோக்குமார் முரண்பட்ட தகவல்களை கூறியதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து நேற்று அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் தொடர்புள்ள மற்ற அதிகாரிகள், யாருடைய உத்தரவின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்தும் அலோக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பான உரையாடல்கள் அடங்கிய ‘பென் டிரைவை‘ இன்ஸ்பெக்டர் ஒருவர் அலோக்குமாரிடம் கொடுத்திருந்ததாக தெரிகிறது. அந்த ‘பென் டிரைவ்‘ குறித்து அலோக்குமாரிடம் நேற்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்ததும் குமரகிருபா விருந்தினர் மாளிகையில் இருந்து அலோக்குமார் புறப்பட்டு சென்றார். தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், அடுத்தக்கட்டமாக முன்னாள் போலீஸ் கமிஷனரான சுனில்குமாரிடமும், மேலும் சில உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story