கடலூரில், ரெயில் மோதி வாலிபர் பலி
கடலூரில் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
கடலூர் முதுநகர்,
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சிறிது நேரத்தில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருகே சென்ற போது, அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது ரெயில் மோதியது. ரெயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் மோதி இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ரெயில்வே போலீசார் பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story