சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் திடீர் போராட்டம் - ராமநத்தம் அருகே பரபரப்பு
ராமநத்தம் அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர்-தச்சூர் சாலையில் இருந்து சாலைப்புலிக்கு செல்வதற்கு வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை தொழுதூர், வைத்தியநாதபுரம், தச்சூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் அவ்வழியாக கிராம மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சேற்றில் சிக்கி விடுகின்றன.
இதனால் இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என மேற்கண்ட 2 கிராமங்களை சேர்ந்த மக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த சாலை மீண்டும் சேறும், சகதியுமாக மாறியது. இதில் நேற்று முன்தினம் அவ்வழியாக சென்ற டிராக்டர் ஒன்று சேற்றில் சிக்கியது. இதனால் ஆத்திரமடைந்த தச்சூர் கிராம மக்கள் நேற்று காலை சேறும், சகதியுமான சாலையில் நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சேறும் சகதியுமான இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்து வந்த ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story