பண்ணைக்குட்டையில், மரபணு மேம்படுத்தப்பட்ட மீன்களை வளர்த்தால் அதிக லாபம் - கலெக்டர் தகவல்
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை, பண்ணைக்குட்டையில் வளர்த்து அதிக லாபம் பெறலாம், என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல்,
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகள், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம். இதர மீன் வகைகளை விட, மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை, குறைந்த பரப்பளவில் அதிக அளவில் வளர்க்கலாம். இந்த வகை மீன்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
அதேபோல் பண்ணைக்குட்டைகளில் இதர வகை மீன்களை விட, திலேப்பியா வகை மீன்கள் வேகமாக வளரும். மேலும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கக் கூடியவையாக உள்ளன. நீரின் அமில காரத்தன்மையின் ஏற்ற, தாழ்வுகளை எதிர்கொண்டு வேகமாக வரும்.
இந்த வகை மீன்கள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு பரவி விடாமல் பார்த்து கொள்வது அவசியம். இதற்காக பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னரே திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும்.
இந்த திலேப்பியா மீன்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் பண்ணையில் பாதுகாப்பு வேலி அமைத்து திலேப்பியா மீன்களை வளர்க்கலாம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு திண்டுக்கல் நேருஜிநகரில் உள்ள மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story