கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல்


கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல்
x

கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் காலியாக இருக்கும் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான புதிய தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி 15 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து 14 மாதங்களாக நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. குமாரசாமி தனது முதல்-மந்திரி பதவியை இழந்தார். கூட்டணி ஆட்சியை காப்பாற்ற குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு இந்த சட்ட சபையின் பதவி காலம் முடியும்வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 21-ந் தேதி அறிவித்தது. இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு ஒரு மாதத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த நிலையில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. அதனை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மனு மீதான விசாரணையை அக்டோபர் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், ஹிரேகெரூர், ராணி பென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று புதிய தேதியை அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாள். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற 21-ந் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது. கடந்த 23-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி (இன்று) வரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தோதல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக கூறி அடுத்த ஒரே நாளில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் வழக்கில் தீர்ப்பு கிடைத்துவிடும் என்று தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Next Story