திருச்சியில் இந்து மகாசபா பிரமுகரை காரில் கடத்திய 7 பேர் கைது


திருச்சியில் இந்து மகாசபா பிரமுகரை காரில் கடத்திய 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2019 4:45 AM IST (Updated: 28 Sept 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இந்து மகா சபா பிரமுகரை காரில் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் இளையராஜா (வயது 32). இவர் அகிலபாரத இந்துமகா சபா மாநில செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு காந்திமார்க்கெட் பகுதியில் இளையராஜா நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் திடீரென அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் இளையராஜாவை காரில் கடத்தி சென்றனர். இதனை கண்ட அந்த பகுதியினர் காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் உ‌ஷார் அடைந்த போலீசார் கடத்தல் கும்பலை பின்தொடர்ந்து ஜீப்பில் விரட்டி சென்று கும்பகோணத்தான் சாலை அருகே மடக்கி பிடித்தனர்.

அப்போது அந்த காரில் இளையராஜாவுடன் சேர்த்து 8 பேர் இருந்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் கே.புதூரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 30), பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த தினே‌‌ஷ்பிரபு(36), நிவாஸ், கம்பரசம்பேட்டையை சேர்ந்த பொன்னார்(26), மேலசிந்தாமணியை சேர்ந்த ஆரிப்(20), பெரம்பலூர் திருமாந்துறையை சேர்ந்த துரைராஜா(23), திருச்சி பழைய குட்ஷெட்ரோட்டை சேர்ந்த அப்துல்சித்திக்(26) என்பது தெரியவந்தது.

7 பேர் கைது

இளையராஜா அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு 4 பேரிடம் முன்தொகையாக ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்று இருந்ததாகவும், அதன்பிறகு அரசு வேலை வாங்கி தராததால் பணத்தை கொடுத்தவர்கள் அவரை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தார். இதற்கிடையே கடத்தல் சம்பவம் குறித்து அறிந்த அகிலபாரத இந்து மகா சபா தமிழ் மாநில தலைவர் கல்கி ராஜசேகர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் சென்று அங்கு உதவி கமி‌‌ஷனரை சந்தித்து, “இளையராஜா தங்களது அமைப்பில் எந்த பொறுப்பிலும் இல்லை. இதுபோல் ஏமாற்று வேலையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது“ என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் சுபா‌‌ஷ்சுவாமிநாதன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “எங்கள் அமைப்பின் மாநில செயலாளரான இளையராஜாவை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அந்த கும்பலை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்கள் அமைப்பின் பெயரை வேறு நபர்கள் பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் சிலர் வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்“ என்றார்.

Next Story