விக்கிரவாண்டி -நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


விக்கிரவாண்டி -நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 28 Sept 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக போக்குவரத்து கழகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 26-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வழித்தடங்களில் 370 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஈரோட்டில் 22 பஸ்களின் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மண்டலத்துக்கு 2018-2019-ம் ஆண்டில் 112 புதிய பஸ்களும், 2019-2020-ம் ஆண்டில் 30 புதிய பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்கள் நலன் கருதி சேவை மனப்பான்மையோடு குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதும் தமிழகத்தில் தான்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். முதுகலை ஆசிரியர்களுக்கு நடந்து வரும் டி.ஆர்.பி. தேர்வில் எந்தவித குழப்பமும் இல்லை. அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை ஆசிரியர்களுக்கு தேவையில்லை. கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு விரைவில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்க ரூ.409 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. விலையில்லா ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு நீட்தேர்வு பயிற்சி சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றிபெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story