தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளியூர் செல்ல 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி


தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளியூர் செல்ல 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளியூர் செல்ல 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருப்பூர் மண்டலத்தில் இருந்து 7 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். திருப்பூர்-பொள்ளாச்சிக்கு பல்லடம், நெகமம் வழியாக 4 பஸ்களும், திருப்பூர்-கோவைக்கு பல்லடம் வழியாக ஒரு பஸ்சும், திருப்பூர்-பரமக்குடிக்கு தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக ஒரு பஸ்சும், பழனி-ஓமலூருக்கு தாராபுரம், ஈரோடு வழியாக ஒரு பஸ்சும் என 7 பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), தனியரசு(காங்கேயம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் மோகன், துணை மேலாளர் முத்துகிருஷ்ணன்(வணிகம்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முதல்-அமைச்சரால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை சார்பில் 370 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. திருப்பூர் மண்டலத்தில் 7 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களை சீரமைத்து புதிய பஸ்கள் தமிழகத்தில் அதிகம் இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 300 பஸ்கள் மதுரை மற்றும் வெளிமாவட்ட தலைநகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் வந்து இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கியுள்ளதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம் மேம்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக கோவில்வழியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

பழைய பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கும்போது இங்கிருந்து இயக்கப்பட்டு வந்த சில பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இயக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பஸ் நிலையம் நவீனமயமாக்கப்பட்ட பஸ் நிலையமாக மாற்றப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு அதிக வசதி கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுக்கும் வகையில் ஆய்வு நடந்துள்ளது. எந்தெந்த மாவட்டத்துக்கு மருந்துகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். டாக்டர் குழு அதிகமாக இருப்பதால் உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா ஆம்புலன்சு சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு ஆம்புலன்சு வழங்கப்பட உள்ளது. அந்த ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டதும், விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் இருக்கும் இடத்துக்கே சென்று சிகிச்சை அளிப்பதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் வசதியாக அமையும். இதனால் அனைத்து பகுதிகளுக்கும் அம்மா ஆம்புலன்சு மூலமாக டாக்டர்கள் சென்று கால்நடைகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story