தாராபுரம் அருகே சூறாவளி காற்றால் 2 பண்ணைகள் இடிந்து விழுந்து 6 ஆயிரம் கோழிகள் செத்தன


தாராபுரம் அருகே சூறாவளி காற்றால் 2 பண்ணைகள் இடிந்து விழுந்து 6 ஆயிரம் கோழிகள் செத்தன
x
தினத்தந்தி 29 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே சூறாவளி காற்றால் 2 கோழிப்பண்ணைகள் இடிந்து விழுந்ததில் 6 ஆயிரம் கோழிகள் செத்தன.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல்பாளையம் பல்லாக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் காளியப்பன்(வயது 48) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 2 கோழிப்பணைகள் அமைத்திருந்தார். கோழிப்பண்ணை ஒவ்வொன்றிலும் தலா 3 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது.

கோழிகள் நனைந்து விடக்கூடாது என்பதற்காக, காளியப்பனும் அவரது தொழிலாளர்களும், பண்ணைக்குள் சென்று, பக்கவாட்டு பகுதிகளில் தார்பாய்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தில் பண்ணைக்கு அருகே இருந்த பெரிய மரங்கள் அதிக சத்தத்துடன் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காளியப்பனும், அவரது தொழிலாளர்களும், கோழிப்பண்ணையை விட்டு வெளியே ஓடி சென்றனர். அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் 2 கோழிப்பண்ணைகளும் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கித் தவித்த, 2 கோழிப்பண்ணையிலும் இருந்த, சுமார் 6 ஆயிரம் கோழிகள் செத்துவிட்டன.

இது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் காளியப்பன் கூறும் போது:-

சுமார் ரூ.10 லட்சம் செலவில் 120 அடி நீளம், 12 அடி அகலத்தில் 2 கோழிப்பண்ணைகளை அமைத்திருந்தோம். கோழிப்பண்ணையின் மேற்கூரை ஓடுகளால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு பண்ணையிலும் 3 ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தது.

கோழிகள் அனைத்தும் 80 நாட்கள் வரை வளர்க்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு கோழியும் சுமார் 1½ கிலோ எடை இருக்கும். இன்னும் 10 நாட்களில் கோழி நிறுவனத்திடம் கோழிகளை ஒப்படைக்க வேண்டும். அதற்குள் சூறாவளி காற்றில் சிக்கி கோழிப்பண்ணை இடிந்து விழுந்து விட்டது. இதனால் சுமார் ரூ.17 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

தகவல் அறிந்த வருவாய்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். மின்சார வாரிய பணியாளர்கள் முறிந்து விழுந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்து, மின் வினியோகத்தை சரி செய்தனர். சென்னாக்கல்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுக்கு சில இடங்களில், சாகுபடியில் இருந்த முருங்கை மற்றும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Next Story