திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் வடமாநில வாலிபர் கைது


திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2019 11:15 PM GMT (Updated: 2019-09-29T00:38:20+05:30)

திருப்பூரில் ஆன்லைனில் அனுப்ப முயன்ற போது ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் வீரபாண்டி மெயின் ரோட்டில் மாகாளியம்மன் கோவில் எதிரே செல்போன் கடை வைத்து உள்ளார். ஆன்லைன் மூலம் பணபரிமாற்றமும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடமாநில வாலிபர் ஒருவர் இவரது கடைக்கு வந்தார். அவர் தனது தந்தையின் வங்கி கணக்குக்கு ரூ.14 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 7-ஐ கொடுத்து உள்ளார். அதை வாங்கி பார்த்த மனோஜ், அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் காகித பேப்பர் போல் இருந்ததால் அதன் மீது சந்தேகம் கொண்டார். உடனே மனோஜ், அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இது கள்ளநோட்டு என்று கூறி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அதற்கு அந்த வாலிபர், தான் கொடுத்த பணம் இது அல்ல என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

உடனே மனோஜ், இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர்.

அப்போது வடமாநில வாலிபர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்பது பதிவாகி இருந்தது. அந்த நோட்டுகளை தான் கடைக்காரர் மனோஜ் திருப்பி அதே வாலிபரிடம் கொடுப்பதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி பார்த்த போது அது அனைத்தும் ஜெராக்ஸ் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அருணாசலப்பிரதேசம் சின் காலா பகுதியை சேர்ந்த கன்யாரம் சக்மா மகன் சமீர் காந்தி சக்மா(வயது 27) என்பதும், இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட மாகாளியம்மன் கோவில் பின்புறம் தனது அண்ணன் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து கொண்டு ஆன்லைனில் தந்தை பெயருக்கு பணபரிமாற்றம் செய்வதற்காக சென்ற போது சந்தேகத்தின் பேரில் கடைக்காரர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் சிக்கி கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவரிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு தனது அண்ணி கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரது அண்ணன் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு வீடு வெளிப்புறமாக கதவு பூட்டி இருந்தது.. அண்ணனையும், அண்ணியையும் காணவில்லை. அவர்களது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சமீர் காந்தி சக்மா போலீசில் சிக்கி கொண்டதை அறிந்து அவர்கள் இருவரும் மாயமாகி விட்டார்களா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தவர்கள் யார்? இது போன்று கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை பணபரிமாற்றம் செய்து உள்ளாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வீரபாண்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் உயர்அதிகாரி ஒருவர் கூறும் போது:-

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகிறார்கள். அது போல் வேலை தேடி தினமும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். முன்பு வங்கிகளுக்கு சென்று பணத்தை அனுப்பி வந்தார்கள். தற்போது மணிடிரான்ஸ்பர் என்று பெயரில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் பணம் அனுப்ப வரும் போது, அந்த பணம் நல்ல ரூபாய் நோட்டா? அல்லது கள்ள ரூபாய் நோட்டா? என்பதை ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமாக கள்ளநோட்டு அனுப்ப யாராவது வந்தால் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உட்கார வைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முடிந்தவரை விழிப்புணர்வுடன் இருந்தால் தான் வியாபாரிகள் ஏமாறாமல் இருக்க முடியும். என்றார்.

Next Story