மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 29 Sept 2019 3:45 AM IST (Updated: 29 Sept 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அருவிக்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகாலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதற்கு மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, உழுவிஆறு, பாராப்பட்டிஆறு, வண்டிஆறு உள்ளிட்ட ஆறுகள் உதவி புரிந்து வருகின்றன. பஞ்சலிங்க அருவியின் இயற்கை சூழலை ரசிக்கவும் அதில் குளித்து மகிழவும் தினந்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருமழை தீவிரமடைந்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆறுகளில் வறட்சி ஏற்பட்டதால் அருவிக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல்மழை பெய்தது. இதனால் ஆறுகளில் ஓரளவிற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் திருமூர்த்திமலைப் பகுதியில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அருவிக்கு வருகின்ற நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story