சீன அதிபர்-பிரதமர் மோடி வருகை: மாமல்லபுரத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு


சீன அதிபர்-பிரதமர் மோடி வருகை: மாமல்லபுரத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர்-பிரதமர் மோடி வருகை எதிரொலியாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் இவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகள் அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சீன அதிபர்-பிரதமர் மோடி இருவரும் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும், அவரது பாதுகாப்பு முன்னேற்பாடுகள், ஆயத்த பணிகள் குறித்தும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.

வெண்ணை உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். குறிப்பாக மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு அருகில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றிய இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

சர்வதேச உளவு அமைப்பு பயங்கரவாதிகளால் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. திரிபாதி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, போலீசார் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது மாமல்லபுரம் முழுவதும் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்துமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

குறிப்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரை கோவில் முகப்பு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளர் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பகுதியில் ஆய்வு செய்தனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர்.

அவர்களுடன் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா மற்றும் பலர் வந்திருந்தனர்.

வெண்ணை உருண்டை கல் பின்புறம் புராதன சின்னங்களை மறைக்கும் வகையிலும், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமலும் அமைக்கப்பட்ட 2 தனியார் செல்போன் கோபுரங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களது உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அந்த 2 செல்போன் கோபுரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர்.

Next Story