அதிகாரிகளின் விளக்கம் குழந்தைக்கு கதை சொல்வது போல் உள்ளது’ - ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டிப்பு


அதிகாரிகளின் விளக்கம் குழந்தைக்கு கதை சொல்வது போல் உள்ளது’ - ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 8:44 AM IST)
t-max-icont-min-icon

‘குடிநீர் பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளின் விளக்கம் குழந்தைக்கு ஒரே கதையை திரும்ப, திரும்ப கூறுவது போல் உள்ளது‘ என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டித்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டறிந்தார்.

அப்போது ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் தவிர பிற அதிகாரிகள் கொடுத்த விளக்கம் அமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார்.

அப்போது, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் அளித்த விளக்கம், கடந்த பல மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டராக இருந்த வினய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த விளக்கம் ஆகும்.

அதனையே தற்போதும் கூறுகிறீர்கள். இது குழந்தைக்கு ஒரே கதையை திரும்ப, திரும்ப கூறுவது போல் உள்ளது. பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் வழங்குவதில் உண்மையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை நீங்கள் விளக்கவில்லை. இதுபோன்ற விளக்கங்கள் அளிப்பதை இனிவரும் காலங்களில் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் பேசும்போது, திண்டுக்கல் நகரில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாத பகுதிகளாக 57 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 24 இடங்களில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள இடங்களுக்கும் விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.

அதைத்தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள நீராதாரங்களில் தூர்வாரும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

மேலும் இந்த பணிகள் மேற்கொண்டது தொடர்பான அறிக்கையை விரைவில் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், தேன்மொழி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரபுராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story