கோவையில் பட்டப்பகலில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை


கோவையில் பட்டப்பகலில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 8:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரவணம்பட்டி, 

கோவை சரவணம்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் அருண் பிரசாத் (வயது 27) ஆட்டோ டிரைவர். இவர் குடும்பத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் நடுவீதிக்கு குடிபெயர்ந்தார். அவர் நேற்று மதியம் 1 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் ஐ.டி.பார்க் நுழைவு வாயில் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ஆட்டோ முன் தங்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் அவர்கள் திடீரென்று அருண் பிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அருண் பிரசாத்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண் பிரசாத்தை சரமாரியாக குத்தினர். இதில் அவருக்கு கை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடித்தபடி விழுந்தார். உடனே அந்த 2 பேரும் வேகமாக தப்பி சென்று விட்டனர். இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த அருண்பிரசாத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அங்கிருந்த ஒரு சிலர் அருண்பிரசாத்தை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி அளித்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருண் பிரசாத் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கொலை செய்த வாலிபர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். கோவையில் பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story