தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் - வருவாய்த் துறை மந்திரி அசோக் பேட்டி


தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் - வருவாய்த் துறை மந்திரி அசோக் பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2019 10:15 AM IST (Updated: 29 Sept 2019 10:15 AM IST)
t-max-icont-min-icon

தொலைபேசி ஒட்டுகேட்பு நடந்திருப்பது உண்மை என்றும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் வருவாய்த் துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் வருவாய்த் துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- 

தொலைபேசி ஒட்டுகேட்பு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தொலைபேசி ஒட்டுகேட்பு நடந்திருப்பது உண்மையாகி இருக்கிறது. ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதியான நிர்மலானந்தசாமியின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. எனவே தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் முக்கியமான வழக்காகும். அதனால் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

ஆனாலும் மடாதிபதியின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்டு இருப்பது சரியல்ல. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மடாதிபதிகளுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.

நிர்மலானந்தசாமி தவிர மற்ற எந்த மடாதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது என்பது சி.பி.ஐ. விசாரணையில் தான் தெரியும். இந்த விவகாரத்தில் யார், யார் சிக்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அதுபோல, தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் ஈடுபட்டு, தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார். 

Next Story