உஷாரய்யா உஷாரு: ரகசியமாக பெற்றெடுத்த குழந்தை


உஷாரய்யா உஷாரு:  ரகசியமாக பெற்றெடுத்த குழந்தை
x
தினத்தந்தி 29 Sep 2019 10:16 AM GMT (Updated: 2019-09-29T15:46:55+05:30)

பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை ஒன்றோடு 18 வயதான இளைஞன் ஒருவன் கடற்கரை பகுதி ஒன்றில் சுற்றிக்கொண்டிருந்தான்.

அந்த பச்சை குழந்தையை எப்படி தூக்கி, பாதுகாப்பாய் வைத்திருக்கவேண்டும் என்றுகூட அவனுக்கு தெரியவில்லை. பால்பாட்டில் அடங்கிய பை ஒன்றையும் தோளில் மாட்டிக்கொண்டு உலாவிக் கொண்டிருந்தான். குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அவன் குழந்தையோடு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான்.

ஒருசில தாய்மார்கள் அவனிடம் சென்று, ‘இது யார் குழந்தை? உங்களுக்கு சரியாக குழந்தையை வைத்திருக்க தெரியவில்லை. குழந்தையின் தாயை எங்கே?’ என்று கேட்டனர். அதற்கு அவன், ‘இது என் அண்ணனின் குழந்தை. அண்ணனும், அண்ணியும் பக்கத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றுக்கு இன்டர்வியூவுக்கு சென்றிருக் கிறார்கள். குழந்தையையும், பால்புட்டியையும் என்னிடம் தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இப்போது வந்துவிடுவார்கள்..’ என்று பதில்சொன்னான். குழந்தைக்கு அவனால் சரியாக பால்புகட்ட தெரியாததால், குழந்தை பசியால் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.

தொடர்ந்து அவனை கவனித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருத்திக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ‘குழந்தையை எங்கிருந்தாவது கடத்தி வந்திருப்பானோ?’ என்ற சந்தேகத்தில், தூரத்தில் இருந்து போட்டோ எடுத்து போலீஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் போலீஸ் வந்துவிட்டது. போலீசை பார்த்ததும் அவன் பதற்ற மடைந்தான். ஒன்றுக்கொன்றாய் உளறிக்கொட்டினான். அதனால் பெண் போலீஸ் ஒருவர் முதலில் குழந்தையை வாங்கி, அதற்கு புட்டிப்பால் ஊட்டினார். பின்பு அவனையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினார்கள். அவன் சொன்ன தகவல் வித்தியாசமானது.

‘எனது தூரத்து உறவினரான இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணும் காதலித்தார்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு ஊரை சேர்ந்தவர்கள். இதே ஊரில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதில் அந்த பெண் கர்ப்பமாகிவிட்டார். அவர்கள் குழந்தைதான் இது.

நான் வேலை தேடி இங்கு வந்து என் உறவினரான அந்த இளைஞரை அணுகினேன். அவர் எனக்கு வேலை வாங்கித்தருவதாக கூறினார். நான் வந்த நேரம் அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என்று இருவரும் முடிவு செய்து, திருமணம் செய்துகொள்ள சற்று தொலைவில் உள்ள கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் கல்யாண தம்பதியாக திரும்பி வரும் வரை குழந்தையை என் பொறுப்பில் விட்டுச்சென்றார்கள். அவர்கள் போய் ரொம்ப நேரமாகிவிட்டது. எனக்கு வீட்டிலே இருக்க போரடித்ததால் குழந்தையோடு பொழுதுபோக்க கடற்கரைக்கு வந்துவிட்டேன்’ என்று கூறியதோடு, குழந்தையின் பெற்றோரின் செல்போன் எண்களையும் போலீசாரிடம் கொடுத்தான்.

அவன் சொன்னது உண்மைதானா என்பதை உறுதிசெய்துகொள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள ‘ஆமா சார்.. கோவிலுக்கு கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கிறோம்.. இங்கே நேரம் ஆகிக்கிட்டே இருக்கு..’ என்று கூற, ‘குழந்தை அழுதுகிட்டே இருக்குது என்ன செய்யுறதுன்னே தெரியலை.. அதுதான் குழந்தையை கோவிலுக்கே கொண்டுவந்து நேரடியாக உன்னிடமே ஒப்படைச்சிடலாம்னு இருக்கோம்’ என்றுகூற, அவள் உடனே ‘அய்யய்யோ மேடம்..! அப்படி எதுவும் பண்ணிடாதீங்க.. இரண்டு தரப்பு சொந்தக்காரர்களும் இங்கே நிறைய கூடியிருக்காங்க.. நாங்க இரண்டு பேரும் இப்போதுதான் காதலிக்கிற ஜோடி மாதிரி அவங்ககிட்டே சொல்லிவைச்சிருக்கிறோம். நாங்க சேர்ந்து வாழ்றதும், குழந்தை பெத்துக்கிட்டதும் யாருக்கும் தெரியாது. குழந்தையை நீங்க இங்கே கொண்டுவந்தால் எங்களுக்கு தீராத அவமானமாகிவிடும். எங்களை கேவலமாக திட்டித்தீர்த்திடுவாங்க! எங்கள் வாழ்க்கையே சிதைந்துபோயிடும். சீக்கிரமே நாங்கள் திரும்பி போலீஸ் நிலையத்திற்கே வந்து குழந்தையை வாங்கிக்கொள்கிறோம். அதுவரை பொறுத்திருந்து எங்கள் மானத்தை காப்பாற்றுங்கள்’ என்றிருக் கிறாள்.

‘இதெல்லாம் என்ன வாழ்க்கை. ரகசியமாக பெற்றெடுத்த குழந்தையை இப்பவே வெளியே காட்ட மறுக்கிறாளே, ஒழுங்காக குழந்தையை வளர்ப்பாளா? அதன் எதிர் காலம் என்னவாகும்?’ என்ற தாய்மை கலந்த கேள்வியோடு அந்த பெண் போலீஸ் அதிகாரி, மாலையில் அவள் திரும்பி வரும்வரை பாட்டில் பாலை புகட்டி குழந்தையை கவனித்திருக்கிறார்..!

- உஷாரு வரும்.

Next Story