இடையார்பாளையம் படகு குழாம் பகுதி ஓடையில் செத்து மிதக்கும் மீன்கள்; முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்


இடையார்பாளையம் படகு குழாம் பகுதி ஓடையில் செத்து மிதக்கும் மீன்கள்; முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 29 Sept 2019 9:52 PM IST)
t-max-icont-min-icon

இடையார்பாளையம் பகுதி ஓடையிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாகூர்.

அரியாங்குப்பம் அடுத்துள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதுச்சேரி அரசு படகு குழாம் இயங்கிவருகிறது. இந்த படகுகள் இயக்கப்படும் பகுதியிலிருந்து முகத்துவாரம் பகுதி வரை உள்ள தண்ணீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள மடவை, கெளுத்தி, நண்டு என பல வகை மீன்கள் ஏராளமான செத்து மிதந்தன. இது சம்பந்தமாக உள்நாட்டு மீனவர்களின் புகாரின் மீது பேரில் புதுச்சேரி சுற்றுச்சூழல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்தனர்.

இந்த நிலையில் சுண்ணாம்பாற்றிக்கு அருகிலுள்ள தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த இடையார்பாளையம் கிராமத்தை ஒட்டி தனியார் நிறுவனம் மூலம் செயல்படும் படகு குழாம் பகுதியிலுள்ள ஓடையிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் புதுச்சேரி அரசு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய முதுநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது செத்து மிதக்கும் மீன்களின் மாதிரிகளும், தண்ணீரையும் சேகரித்தனர். மேலும் தனியார் கம்பெனி கழிவுகள் கொண்ட வண்டிகள் வந்ததா என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர் . பின்னர் இந்த மாதிரிகளை சென்னையில் உள்ள கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் பொறியாளர் ரமேஷ் கூறியதாவது;-

இந்த பகுதியில் சுண்ணாம்பாறும் கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதி தூர்ந்து போய் உள்ளதால், ஆற்று நீர் கடலில் கலப்பதும், கடல் நீர் ஆற்றுக்குள் வருவதுமான நிகழ்வு தடைப்பட்டுள்ளது. மேலும் பருவமழை பெய்யாததால் ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் இறந்து வருகிறது. மீன்கள் உயிர் வாழ்வதற்கு, ஒரு லிட்டர் தண்ணீரில் 6 மில்லி கிராம் என்ற அளவில் ஆக்சிஜன் இருக்க வேண்டும்.

பகல் நேரங்களில் சூரிய ஒளிச்சேர்க்கையின் மூலமாக, இந்த ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 மில்லி கிராம் என்ற ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் ஒளிச் சேர்க்கை இல்லாததாலும், கடல் நீர் ஆற்றுக்குள் வருவது தடைபட்டுள்ளதாலும், ஒரு லிட்டருக்கு, 2 மில்லி கிராம் என்ற அளவிற்கு ஆக்சிஜன் குறைந்து விடுகிறது. இதனால், தாக்குபிடிக்க முடியாமல் மீன்கள் செத்து விடுகின்றன என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. இதற்கு முகத்துவாரம் வழியாக கடல் நீர் ஆற்றுக்குள் வந்து செல்ல வேண்டும், கடல்பாசிகள் ஆற்றில் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இப்பகுதி உள்ள மீன்கள் தொடர்ந்து செத்து மிதப்பதால் உள்நாட்டு மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரியாங்குப்பம் புற நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் அதிகப்படியாக ஆற்றில் கலக்கப்படுகிறது இதற்கான வாய்க்கால் அமைப்புகளே அரசு அமைத்துள்ளது. ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக கழிவு ஆற்றில் கலக்காமல் இருக்கவும் முகத்துவாரத்தை தூர் வாரி ஆற்றில் உள்ள மீன் வளங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Next Story