அந்தியூரில் குண்டும், குழியுமாக காணப்படும் செல்லீஸ்வரர் கோவில் ரோடு சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


அந்தியூரில் குண்டும், குழியுமாக காணப்படும் செல்லீஸ்வரர் கோவில் ரோடு சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Sept 2019 3:30 AM IST (Updated: 29 Sept 2019 9:01 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் குண்டும், குழியுமாக காணப்படும் செல்லீஸ்வரர் கோவில் ரோடு சீரமைக்கப்படுமா? என பக்தர்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

அந்தியூர்,

அந்தியூர் சிவசக்தி நகரில் மிகவும் பழமையான செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் பெருமாள் கோவில், ஓம் சக்தி கோவில், அந்தியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

செல்லீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவில், ஓம் சக்தி கோவிலுக்கும் சென்று சாமியை வழிபாடுவார்கள்.

அதுமட்டுமின்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இருப்பதால் பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி ஏராளமான பொதுமக்கள் இங்கு வருவதுண்டு. எனவே செல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த ரோடு பக்தர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. வயதான பக்தர்கள் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டு இரவில் அந்த ரோட்டில் நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து உள்ளார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழிகள் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர்.

தற்போது அந்தியூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ரோட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எது பெரிய குழி, சிறிய குழி என தெரியாமல் அதனுள் விழுந்து செல்கிறார்கள்.

எனவே செல்லீஸ்வரர் கோவில் ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story