கிண்டி கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர் கைது


கிண்டி கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 29 Sept 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

கிண்டி கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம்,

திண்டுக்கல்லை சேர்ந்தவர் முகமது சாகிப்(வயது 30). கால் டாக்சி டிரைவர். இவர், கிண்டியில் தங்கி, தனியார் கால்டாக்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காரை ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல பயணி ஒருவர் காரை முன்பதிவு செய்தபோது, அதனை டிரைவர் முகமது சாகிப் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முகமது சாகிப்பை, கால்டாக்சி நிர்வாகத்தினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி முகமது சாகிப், கிண்டி போலீசில் புகார் செய்தார். இதேபோல் கால் டாக்சி நிர்வாகத்தினரும், முகமது சாகிப் மீது புகார் செய்தனர். இந்த 2 புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று முன்தினம் இரவு டிரைவர் முகமது சாகிப், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சிஅடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை மடக்கிப்பிடித்து தடுத்தனர். பின்னர் முகமது சாகிப்பை மீட்டு கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவர், கால்டாக்சி நிர்வாகத்தினர் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி போலீசில் புகார் செய்து உள்ளதாக கூறினார். இதற்கிடையே கவர்னர் மாளிகை முன்பு தற்கொலைக்கு முயன்றதாக முகமது சாகிப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story