ஈரோட்டில் 4 மனைவிகளுடன் வாழ்ந்தவர் பிச்சைக்காரராக மாறிய பரிதாபம்; இளைஞர்- இளம்பெண்கள் மீட்டனர்


ஈரோட்டில் 4 மனைவிகளுடன் வாழ்ந்தவர் பிச்சைக்காரராக மாறிய பரிதாபம்; இளைஞர்- இளம்பெண்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 5:27 PM GMT)

ஈரோட்டில் 4 மனைவிகளுடன் வாழ்ந்தவர் பிச்சைக்காரராக மாறினார். அவரை இளைஞர்- இளம்பெண்கள் மீட்டனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே லட்சுமிநகர் கோணவாய்க்கால் பகுதியில் முதியவர் ஒருவர் சாலையோரமாக வசித்து வந்தார். அவர் யாசகம் பெற்று 3 வேளைகளும் சாப்பிட்டார். ஆதரவற்றோரை மீட்கும் இளைஞர்- இளம்பெண்கள் குழுவினர் அந்த முதியவரை மீட்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அவர்கள் அந்த முதியவரிடம் பேசி சாப்பாடு வாங்கி கொடுத்தனர். பிறகு அந்த பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கரையோரமாக முதியவரை உட்கார வைத்து அவர்கள் குளிப்பாட்டினார்கள். தொடர்ந்து அவருக்கு புத்தாடை அணிவித்து புதுக்கோட்டையில் உள்ள நமது இல்லம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்க அழைத்து சென்றனர்.

இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் மனீஷா கூறியதாவது:-

லட்சுமிநகரில் மீட்கப்பட்ட முதியவரின் பெயர் சின்னப்பன். அவருக்கு 70 வயது இருக்கும். கடந்த சில மாதங்களாக பெருமாள்மலையில் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வசித்து வந்தார். சின்னப்பனிடம் நாங்கள் பேசியபோது, அவர் தனியாக தொழில் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் சிறந்த லாபம் கிடைத்ததால் செல்வந்தராக இருந்ததாகவும் கூறினார்.

மேலும், அவருக்கு 4 மனைவிகளும், மகன்களும், மகள்களும் உள்ளனர். பணத்தை பலர் ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு விபத்து ஏற்பட்ட பிறகு மனைவிகள், மகன்-மகள்கள் பராமரிக்காததால் பிச்சைக்காரராக மாறிவிட்டதாகவும் எங்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் கொண்டு சென்று சேர்த்தோம்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சூளை பகுதியில் குந்தியம்மாள் (வயது 75) என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையில் ஆதரவின்றி சாலையோரமாக கிடந்தார். அவர் மழையில் நனைந்ததால் உடல்நலக்குறைவோடு காணப்பட்டார். அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார்.

அவரிடம் விசாரித்தபோது தனது உறவினரை தேடி பர்கூரில் இருந்து ஈரோடு வந்ததாகவும், அதன்பிறகு வழிதெரியாமல் ஈரோட்டிலேயே சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. மேலும், அவருடைய மகள் தேடி வருவார் என்ற நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார். அவரையும் நாங்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story