வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஊழியர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்


வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஊழியர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:00 AM IST (Updated: 29 Sept 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று நெல்லையில் நடந்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை, 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவின் 12-வது மாநில மாநாடு நெல்லை டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக பெண் ஊழியர்களின் சிறப்பு மாநாடு நடந்தது. வக்கீல் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அமைப்பாளர் பிரேமலதா அறிக்கை தாக்கல் செய்தார். பொது செயலாளர் சி.பி.கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாலையில் பொது மாநாடு நடந்தது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். முத்துக்குமாரசாமி வரவேற்று பேசினார். வெங்கடேசன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

நேற்று காலை 2-வது நாளாக மாநாடு தொடங்கியது. வினோத்குமார் வரவேற்று பேசினார். மாநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

11-வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி விரைவில் முடித்து புதிய சம்பளம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்த வேண்டும். கூடுதலாக பென்சன் வழங்க வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். வங்கி சேவையில் காலதாமதம் ஆகும். நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி பெண் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாரா கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திரளான இந்தியன் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story