தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி


தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 30 Sept 2019 4:00 AM IST (Updated: 29 Sept 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி, 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மகன் கோமதிசங்கர் (வயது 42). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஓட்டலில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக கோமதி சங்கர் சுவிட்சை போட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக மத்தியபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story