பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறியது; விவசாயிகள் பீதி


பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறியது; விவசாயிகள் பீதி
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறியது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். விவசாயி. இவருடைய விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு தனது 4 வெள்ளாடுகள் மற்றும் 2 மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளை தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை எழுந்து தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டின் கழுத்தில் கடித்து குதறிவிட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

மேலும் அருணாசலம் தோட்டம் அருகே உள்ள சண்முகம் என்பவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த வெள்ளாட்டை காணவில்லை. எனவே அவரது தோட்டத்துக்குள்ளும் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த வெள்ளாட்டை கடித்து குதறி கொன்றுவிட்டு அதன் உடலை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது தெரியவந்தது. உடனே இதுபற்றி விவசாயிகள் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சண்முகத்தின் தோட்டத்தில் பதிவான சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். அதில் தோட்டத்துக்குள் புகுந்தது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் விவசாயிகளுடன் சேர்ந்து சிறுத்தை கவ்விச்சென்ற ஆட்டின் உடலை தேடி பார்த்தனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘சிறுத்தையின் நடமாட்டத்தால் நாங்கள் பீதியடைந்துள்ளோம். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story