வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்


வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:30 PM GMT (Updated: 29 Sep 2019 8:42 PM GMT)

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான நடேசன் வேட்பு மனுக்களை பெற்று வருகிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ராகவன், பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கட்சி சார்பில் பிஷப் காட்ப்ரே நோபுள், சென்னையை சேர்ந்த அக்னி ராமச்சந்திரன், தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் சீனிராஜன், ஏமன்குளத்தை சேர்ந்த திருமுருகன், பானான்குளத்தை சேர்ந்த மாரியப்பன், சேரகுளத்தை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சுயேச்சைகளாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 3-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Next Story