எதிர்க்கட்சிகளில் நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா வியூகம்


எதிர்க்கட்சிகளில் நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா வியூகம்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 8:42 PM GMT)

எதிர்க்கட்சிகளில் நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா வியூகம் அமைத் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை, 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் பல்வேறு பிரச்சினைகளால் குழப்பமான சூழல் நிலவுவது போல தெரிவதால், அதை பயன்படுத்தி மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கையில் பா.ஜனதா இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு முடியாத நிலையிலும், அமித்ஷா தலைமையிலான பா.ஜனதா மராட்டியத்தில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க முடியும் என நம்புகிறது.

இதேபோல சிவசேனாவும் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்க சம்மதித்தால், பா.ஜனதாவை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இந்த முடிவுக்கு சில சிவசேனா தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல சமீபத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கு மகாஜன்தேஷ் யாத்திரை மேற்கொண்டார். இதன் மூலம் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு உயர்ந்து இருப்பதாக அந்த கட்சி கருதுகிறது.

இதேபோல ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையாலும் தங்களது கட்சியின் வாக்குவங்கி அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நினைக்கிறது. இதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பமான சூழல் நிலவி வருவது போன்ற தோற்றம் உருவாகி இருப்பதால் அதை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பா.ஜனதா உள்ளது.

இதுகுறித்து அரசியல் வல்லுநர் கூறுகையில், ‘‘காங்கிரசின் பார்வை மற்றும் பாதையில் தெளிவு இல்லை. வேட்பாளர் தேர்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை. இதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலாசாகிப் தோரட் மற்றும் 5 செயல் தலைவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனவே அவர்கள் தங்கள் தொகுதியை தாண்டி பிரசாரத்துக்கு செல்ல முடியாது.

இதேபோல காங்கிரஸ் விதர்பா, மரத்வாடா, கொங்கன், வட மராட்டியம், மேற்கு மராட்டியம் ஆகிய 5 மண்டலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு அவர்களின் பணி என்ன என்பது கூட தெரியவில்லை’’ என்றார்.

மேலும் தேசியவாத காங்கிரசிலும் பல தலைவர்கள் சிவசேனா, பா.ஜனதா கட்சிக்கு தாவி உள்ளதால் அங்கு குழப்பமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. சரத்பவார் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, எம்.ஐ.எம். கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் அதுவும் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story