கோவில் சொத்துக்களை பாதுகாக்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
கோவில் சொத்துக்களை பாதுகாக்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 9-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காந்திசிலை அருகே உள்ள வன்னியர் மடாலயத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் சித்தர்கள் பேரவையின் மாநில மாநாடு நடந்தது. இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் விஜயராஜ், மாநில செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சித்தர் பேரவை மாநில பொது செயலாளர் ஆதிசிவ அண்ணாமலை சித்தர், மாநில தலைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இருந்து ஆன்மிக பக்தர்கள் ஊர்வலமாக மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.
மாநாட்டில், தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த அனைத்து கோவில்களையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சி மற்றும் சித்தர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தற்போது யார் பயன்படுத்தி வருகின்றார்களோ அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்து விடலாம் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கு விரோதமான இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லை என்றால் வருகிற 9-ந் தேதி கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பதை கண்டித்தும் மாநிலம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story