செய்யாறில் ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக் கொலை: வாகன சோதனையில் 5 பேர் சிக்கினர் - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
செய்யாறில் ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு,
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன்காளத்தி என்பவரின் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுனில் ஒரு தியேட்டர் அருகே உள்ள டீக்கடையில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் சரசரவென இறங்கி சதீஷ்குமாரை வெட்டினர்.
மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க அவர் அந்தவழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார். பின்னால் துரத்தி சென்ற மர்மநபர்கள் பஸ்சுக்குள் ஏறி, அவரை சரமாரியாக வெட்டினர். சுயநினைவின்றி கிடந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமாரின் தந்தை முருகன்காளத்தி செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்தார்.
முருகன்காளத்தி கொடுத்த புகாரில், காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தில் வசித்தபோது எதிர்வீட்டில் வசிக்கும் வக்கீல் சிவக்குமார் என்பவரை சதீஷ்குமார் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தகராறு செய்து கத்தியால் வெட்டினர். அந்த சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் சதீஷ்குமார் வெளியே வந்தார். காஞ்சீபுரத்தில் இருந்தால் பிரச்சினை வரும் என நினைத்து, காஞ்சீபுரத்தில் இருந்து வீட்டை காலிசெய்து செய்யாறு வேல்சோமசுந்தரம் நகரில் வசித்து வருகிறோம். நேற்று முன்தினம் சதீஷ்குமார், தாயார் கிருபாவதியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு முடித்துவிட்டு பின்னர் கிருபாவதியை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றான். இந்த நிலையில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் போலீசார், சொத்து தகராறு காரணமாக முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளதா?, கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டாரா?, சதீஷ்குமார் மீது பல குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளதால் வேறு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆற்காடு போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற காரை மடக்கி விசாரணை செய்தனர். காரில் இருந்த 5 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
சதீஷ்குமார் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து ஆற்காடு போலீசார் அவர்களை பிடித்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story