5 மையங்களில் நடந்தது: முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,581 பேர் எழுதினர்


5 மையங்களில் நடந்தது: முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,581 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 2019-09-30T05:03:06+05:30)

திண்டுக்கல்லில், 5 மையங்களில் நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,581 பேர் எழுதினர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். என்ஜினீயரிங் கல்லூரி, பழனி சுப்ரமண்யா என்ஜினீயரிங் கல்லூரி, நத்தம் என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆர்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி, வத்தலக்குண்டு வீரம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் காலை, மதியம் என இரு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேர்வை எழுத 2 ஆயிரத்து 14 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 5 மையங்களிலும் நடைபெற்ற தேர்வை 821 பேர் எழுதினர். 183 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்வை 760 பேர் எழுதினர். இந்த தேர்வை 250 பேர் எழுதவில்லை. மொத்தம் இந்த தேர்வை 1,581 பேர் எழுதினர். 433 பேர் தேர்வு எழுதவரவில்லை. இந்த நிலையில் நேற்று ஆர்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story