கோத்தகிரி டேன்டீ பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை - கலெக்டருக்கு கோரிக்கை


கோத்தகிரி டேன்டீ பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை - கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 29 Sep 2019 9:45 PM GMT (Updated: 29 Sep 2019 11:33 PM GMT)

கோத்தகிரி டேன்டீ பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு.வெற்றிவேல் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக(டேன்டீ) கோத்தகிரி கோட்டத்தில் உள்ள குயின்சோலை, கூடக்கல்ஹல்லா, தேனாடு கூப்பு, புது கூப்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. இதேபோன்று கர்சன்வேலி, டீப்டேல், பரவக்காடு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதை தீர்க்க அதிகாரிகளுக்கு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் திட்டத்தின் கீழ் கிணறுகள் வெட்டப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்பட்டது. ஆனாலும் பரவக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட கிணற்று தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்று நீரை காய்ச்சி குடித்து வருகின்றனர். எனினும் நீண்ட தொலைவில் இருந்து குடங்களில் சுமந்து கொண்டு வந்து ஆற்று நீரை பயன்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் கிராமங்களில், அதனை தீர்க்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story