கொலையாளிகளை கைது செய்யக்கோரி, ஆட்டோ டிரைவர் உடலை வாங்க மறுத்து போராட்டம்


கொலையாளிகளை கைது செய்யக்கோரி, ஆட்டோ டிரைவர் உடலை வாங்க மறுத்து போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கொலையாளிகளை கைது செய்யக்கோரி, ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

கோவை,

கோவையை அடுத்த சரவணம்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் ஐ.டி. பார்க் நுழைவாயில் அருகே நின்ற போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தி அருண்பிரசாத்தை கொலை செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் கொலையாளிகள் யார்? என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர்களின் உடை, இருசக்கர வாகனம் போன்றவையும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், தப்பிச் சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் முன்விரோதம் காரணமாக அருண் பிரசாத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் அருண்பிரசாத் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை அறை முன்பு நேற்று 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அருண்பிரசாத்தின் தாயாருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அருண்பிரசாத்தின் உடலை வாங்க மாட்டோம். கோவை மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர். மேலும் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.

இதையறிந்த போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அருண்பிரசாத்தின் உடலை பெற்றுச்சென்றனர்.

Next Story