தெற்கு ராஜன் வாய்க்கால் கரைப்பகுதியில், ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலை உள்வாங்கியது


தெற்கு ராஜன் வாய்க்கால் கரைப்பகுதியில், ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலை உள்வாங்கியது
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 29 Sep 2019 11:34 PM GMT)

தெற்கு ராஜன் வாய்க்கால் கரைப்பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலை உள்வாங்கியது. இதில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து குமராட்சி பகுதி விளைநிலங்கள் பாசனம் பெறும் வகையில் தெற்குராஜன் வாய்க்கால் அமைந்துள்ளது. இதில், குமராட்சியில் இருந்து புளியங்குடி கிராமத்திற்கு செல்லும் வகையில் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு தெற்கு ராஜன் வாய்க்கால் கரை பகுதியில் சாலை அமைந்திருக்கிறது.

இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் இந்த பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.6 கோடி செலவில் புதிய தார் சாலை அமைத்தனர்.

இந்த சூழ்நிலையில் தெற்கு ராஜன் வாய்க்காலில் கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்காலில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் அதிகளவில் செல்வதால் அதன் கரைப்பகுதி பலவீனம் அடைந்து போய் உள்ளது.

அதாவது புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையானது உள்வாங்கி ஒரு பகுதி மட்டும் வாய்க்காலின் உள்ளே சரிந்து நிற்கிறது. இதனால் விபத்துகள் நேரிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை தடுக்கும் விதமாக சாலை உள்வாங்கிய பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் நிரப்பி, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

தார் சாலை அமைத்து 2 மாதங்களே ஆன நிலையில், இதுபோன்ற விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி இருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் வாய்க்கால் கரைப்பகுதியை பலப்படுத்தாமல், பெயரளவுக்கு சாலை அமைத்து விட்டதாகவும், இதன் விளைவாக தான் இத்தகைய நிலை ஏற்பட்டு இருக்கிறது. புதிய சாலை அமைத்தும் மக்களுக்கு பயனற்ற நிலையிலேயே இருக்கிறது. எனவே தரமற்ற சாலை அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், சாலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story