நீதிமன்றத்தை நாடிவரும் மக்களுக்கு விரைவாகவும், நேர்மையாகவும் நீதி வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி சுப்பையா பேச்சு


நீதிமன்றத்தை நாடிவரும் மக்களுக்கு விரைவாகவும், நேர்மையாகவும் நீதி வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி சுப்பையா பேச்சு
x
தினத்தந்தி 30 Sept 2019 4:00 AM IST (Updated: 30 Sept 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தை நாடிவரும் மக்களுக்கு விரைவாகவும், நேர்மையாகவும் நீதி வழங்க வேண்டும் என்று விக்கிரவாண்டியில் நடந்த புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பையா பேசினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி கச்சியப்பசெட்டி தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பையா, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

விழாவில் நீதிபதி சுப்பையா பேசியதாவது:-

விக்கிரவாண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டு, அதில் நீதிமன்றங்கள் இயங்கும். ஏனெனில், நீதிமன்றத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகள், மிகவும் அவசியமானதாகும். மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் தேவை. மக்களும் தங்களது உரிமைகளை பெற நீதிமன்றங்களுக்கு வந்து செல்கின்றனர். நீதிமன்றத்தை நாடிவரும் மக்களுக்கு விரைவாகவும், நேர்மையாகவும் நீதி வழங்க வேண் டும். காலதாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறப்படுகிறது. நீதித்துறையில் புதிய, புதிய சட்டங்கள் தினமும் உருவாகுகின்றன. அவைகளை வக்கீல்கள் கற்று தெரிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கருத்தரங்குகள், ஆலோசனை கூட்டங்களில் வக்கீல்கள் கலந்து கொண்டு சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு நீதிபதி சுப்பையா பேசினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி ரமேஷ் பேசியதாவது:-

தமிழக நீதித்துறையில் முன்னோடி மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது. இங்குள்ள நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. வானூர் நீங்கலாக அனைத்து நீதிமன்றங்களுக்கும், நிரந்தர கட்டிடம் உள்ளது. அதே நேரத்தில் சிறந்த நீதிமன்றம் என்பது, உள்கட்டமைப்பு வசதியைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சிறந்த நீதிமன்றம் என்பது அங்கு வழங்கப்படும் சரியான தீர்ப்புகளை பொறுத்தே அமைகிறது. வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துதான் சிறந்த நீதிமன்றமா? என்பதை மதிப்பிட முடியும்.

சமீபத்தில் புதியதாக 225 நீதிமன்ற நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதித்துறையில் ஓராண்டுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயற்சியை முடித்து வரும்போது, சிறந்த நீதியை அவர்கள் வழங்குவார்கள். வழக்கு தொடரும் பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், சிறந்த நீதி கிடைக்கவும் வக்கீல்களின் பங்கும், திறமையும் மிக முக்கியமானது. இதை வக்கீல்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ரமேஷ் பேசினார்.

விழாவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வக்கீல்கள் மாரிமுத்து, தமிழ்ச்செல்வன், காணை ஸ்ரீதர், கோவிந்தராஜலு, வக்கீல்கள் சங்க செயலாளர்கள் சிவக்குமார், சங்கரன், கதிரேசன், ராதாகிருஷ்ணன், மூத்த வக்கீல் தயானந்தன், அரசு வக்கீல்கள் சீனுவாசன், வேலவன், நீதி மன்ற மேலாளர் ஜெரின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி சுஜாதா நன்றி கூறினார்.

Next Story