பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் - மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்குமா?


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் - மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்குமா?
x
தினத்தந்தி 29 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 12:11 AM GMT)

மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர், 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு மகளிர் போலீஸ் நிலையங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசும், போலீஸ் துறை இயக்குனரும், நீதிமன்றங்களும் பல சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் அருகே ஆமத்தூரில் பெண் பல் டாக்டர் ஒருவர் திருமணம் ஆன 1½ ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்த நிலையில் தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பெண் டாக்டரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் உடனடி நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் சம்பவம் நடைபெற்று 15 மாதங்கள்கழித்து வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் டாக்டரின் கணவர், மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு செய்து கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக கொலை வழக்குகளில் துப்புதுலக்குவதற்கு தாமதம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கிலும், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பின்னரும் நடவடிக்கை எடுப்பதில் 15 மாதங்கள் தாமதித்தது ஏன்? என்று தெரியவில்லை.

முரண்பாடு

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தை போனில் தொடர்பு கொண்டு விசாரித்த போது அங்கிருந்த போலீசார் தகவல் ஏதும் தெரியாது என்று கூறிய நிலையில் போலீஸ் நிலைய அதிகாரியிடம் விவரம் கேட்க முயன்ற போது நேரில் வந்தால்தான் விவரம் சொல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள நிலையில் நேரடியாக தொலை சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது விவரம் தெரிவிப்பதில் என்ன இடர்பாடு என்று தெரிய வில்லை.

இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு பொறுப்பான போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் முரண்பட்ட தகவலை தெரிவித்தார். இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டரின் கணவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், மாமனார் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் தலைமையிட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இந்த வழக்கில் கணவர், மாமனார் 2 பேரும் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த நிலையில் தாமதம் ஆன நடவடிக்கைக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

ஒரு இளம்பெண்ணுக்கு எதிரான குற்றம் தொடர்பான நடவடிக்கை தாமதமாக எடுக்கப்பட்ட நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் தகவல் தர தயங்குவதும், முரண்பட்ட தகவலை தெரிவிப்பதும் ஏற்புடையது அல்ல. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இனி வரும் காலங்களில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தரப்படும் புகார்கள் மீது மெத்தனம் காட்டாமல் தாமதமின்றி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், குற்றம் செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தாமதம் இல்லாமல் எடுக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story