மேலக்கிடாரம் கிராமத்தில் 8 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவில் திறப்பு - தாசில்தாருக்கு அருள் வந்ததால் பொதுமக்கள் பரவசம்
சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவிலை தாசில்தார் திறந்து வைத்தார். அப்போது அவருக்கு அருள் வந்ததால் பொதுமக்கள் பரவசமடைந்தனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் திருவடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு மற்றும் உய்யவந்தம்மன் முளைப்பாரி திருவிழா கடந்த 300 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முன்பகை காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. அப்போதைய தாசில்தார் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி 2013-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா மற்றும் புரவி எடுப்பு விழாவை நிறுத்தி வைத்தார். மேலும் கோவிலை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8 வருடங்களாக திருவிழா நடைபெறவில்லை.
இதையடுத்து தற்போது இந்த திருவிழாவை நடத்துவதற்கு கிராம தலைவர் அய்யனார்முருகன் தலைமையிலும் கீழக்கிடாரம் முத்துகிருஷ்ணன் சேர்வைக்காரர் ஆகியோர் முன்னிலையிலும் பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவை மீண்டும் நடத்தவேண்டும் என இதில் தீர்மானிக்கப்பட்டது.இந்த திருவிழாவை நடத்த தடை ஆணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அ.ம.மு.க. சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு மனு செய்திருந்தார். இதனை கோர்ட்டு நிராகரித்ததுடன், கிராம மக்கள் தீர்மானத்தின் அடிப்படையில் திருவிழா நடத்த வேண்டும் எனவும், ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மனுதாரர் மற்றும் அதனை ஏற்படுத்துபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் அளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் விழா கமிட்டியாளர்கள் உய்யவந்தம்மன் கோவில் முளைக்கொட்டு வாசலை திறந்து வைக்க கடலாடி தாசில்தார் முத்துக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று கடலாடி தாசில்தார் முத்துக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, கீழச்செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேசுவரன் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் கோவிலை திறந்தனர். அப்போது கடலாடி தாசில்தாருக்கு அம்மன் அருள் வந்து பொதுமக்களை முன்னிலையில் சாமியாடினார். இதை பார்த்த பொதுமக்கள் பரவசப்படுத்தினார். கடந்த 8 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவில் புரட்டாசி மாதத்தில் மீண்டும் திறக்க அனுமதி அளித்ததால் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவாட்டார பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story