ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வுக்கான பயிற்சியில் சேர மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வுக்கான பயிற்சியில் சேர மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 2019-09-30T06:02:06+05:30)

ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வுக்கான பயிற்சியில் சேர மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழு அமைத்து அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in -லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மதுரை மண்டல மீன்வள துணை இயக்குனர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் அலுவலங்களில் வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளத்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல்-624001 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு திண்டுக்கல் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது 0451-2427148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Next Story