சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மஞ்சூர் - ஊட்டி சாலையில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மஞ்சூர்-ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மஞ்சூர், எடக்காடு, எமரால்டு, தங்காடு, கைக்காட்டி, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தா பாலம் அருகில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும்அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அதன்பேரில் அதிகாரிகளின் உத்தரவையடுத்து 10-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் விரைந்து வந்து,மண்சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சாலையில் கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் மஞ்சூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்து தொடங்கியது. இதேபோன்று மேரிலேண்டு சாலை,கிண்ணக்கொரை சாலை, கோரகுந்தா சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டது. அதனைபொக்லைன் எந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.கொட்டி தீர்த்த மழையால் 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணை நேற்று காலை நிரம்பியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி மதகுகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story