கூடலூர் அருகே, காட்டுயானைகள் அட்டகாசம் - நெல் நாற்றுகள், வாழைகளை சேதப்படுத்தின
கூடலூர் அருகே நெல் நாற்றுகள், வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்துகின்றன. சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்கின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் காட்டுயானைகள் மனிதர்களை தாக்குகிறது.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா பாண்டியாறு குடோன் பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் முன்டக்குன்னு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு குட்டிகளுடன் காட்டுயானைகள் அப்பகுதிக்குள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதற்கிடையில் அப்பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தன.
இதில் மாதவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 300 வாழைகள் சேதம் அடைந்தன.
இதேபோல் அங்குள்ள வயலுக்குள் இறங்கிய காட்டுயானைகள் சுமார் 30 சென்ட் பரப்பளவில் பயிரிட்டு இருந்த நெல் நாற்றுகளை நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் திரண்டு வந்து, காட்டுயானைகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காட்டுயானைகள் துரத்தின. உடனே விவசாயிகள் வந்த வழியாக திரும்பி ஓடி உயிர் தப்பினர்.
மேலும் மழையும் பலமாக பெய்து கொண்டிருந்ததாலும், இரவில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் விவசாயிகளால் தொடர்ந்து காட்டுயானைகளை விரட்ட முடியவில்லை. பல மணி நேரம் அப்பகுதியில் நின்றிருந்த காட்டுயானைகள் விடியற்காலையில் அங்கிருந்து சென்றன.
இது குறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் நேரில் வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுயானைகளால் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாகவும், உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
இன்னும் 2 வாரத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்ய இருந்த நிலையில் காட்டுயானைகள் புகுந்து நாசம் செய்து விட்டன. சுமார் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பலமுறை பயிர்களை காட்டுயானைகள் தின்று சேதப்படுத்தி விட்டது. ஆனால் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.
கடன் வாங்கி விவசாயம் செய்தால் காட்டுயானைகள் அட்டகாசம் மற்றும் அளவுக்கு அதிகமாக பெய்யும் மழையால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
Related Tags :
Next Story