சென்டிரல், எழும்பூர் உள்பட 4 ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நவீன எந்திரம் முன்வரும் பயணிகளுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை


சென்டிரல், எழும்பூர் உள்பட 4 ரெயில் நிலையங்களில்  பிளாஸ்டிக்கை ஒழிக்க நவீன எந்திரம் முன்வரும் பயணிகளுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 1 Oct 2019 4:45 AM IST (Updated: 1 Oct 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல், எழும்பூர் உள்பட 4 ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நவீன எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்க முன்வரும் பயணிகளுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

சென்னை,

ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க, ரெயில்வே அமைச்சகம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி வருகின்றனர். பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்களை ஆங்காங்கே அப்படியே போட்டு விடுவதால் ரெயில் நிலைய தூய்மை கெட்டுவிடுகிறது.

இதற்கு ரெயில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை, பொடியாக்கி மறுசுழற்றி செய்யும் நவீன எந்திரங்களை ரெயில் நிலையங்களில் நிறுவி வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வே சென்னைக் கோட்டத்தில் முதல் கட்டமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அரைத்து பொடியாக்கும் நவீன எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

முதலில் எந்திரத்தில் உள்ள துவாரம் வழியே பாட்டிலை போட்டதும், எந்திரம் தானாகவே பாட்டிலை அரைக்க ஆரம்பித்து விடும். அரைத்து முடித்ததும் எந்திரம் தானாகவே நின்று விடும். பின்னர் எந்திரத்தில் உள்ள முகப்புத்திரையில் சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண் கேட்கும்.

அதில் செல்போன் எண்ணை குறிப்பிட்டதும், சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வரும். அதில் வெகுமதியாக, ஒரு பாட்டிலுக்கு ரூ.1 ஊக்கத்தொகையாக அந்த செல்போன் எண்ணுக்கு வழங்கப்படும். 60 நொடிக்குள் செல்போன் எண்ணை பதிவு செய்ய தவறினால், முகப்புத்திரை மறைந்து எந்திரம் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். விரைவில் அனைத்து, முக்கிய ரெயில் நிலையங்களிலும் இந்த நவீன எந்திரம் அறிமுகப்படுத்தப்படும். தற்போது 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் சேவை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் இந்த சேவை கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க ரெயில்வே அமைச்சகம், கொண்டுவந்துள்ள இந்த நவீன எந்திரம் பயணிகளிடையே ஆர்வத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Next Story